அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Sunday, 22 August 2010

வேலை இருக்கு ஆனா இல்ல


  

Picture

  சுரண்டிப்பிளைப்பவன்  ஏழ்மை பற்றி பேசுவதும் , இன்றைய  அரசியல்வாதி நேர்மைபற்றி உரைப்பதும் , வெயிலில் கருப்புசட்டை அணிந்து  பகுத்தறிவு பறைசாற்றுவதும் , தமிழ் வாழ்க என்று ஆங்கிலத்தில் முழங்குவதும் எவ்வளவு  கேளிக்குரியதோ அவ்வளவு நகைப்பிற்குரியது இன்றைய கல்வியாளர்கள் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசுவதும். தற்பொழுது  உள்ள வேலையில்லா திண்டாட்டத்திற்கு   மிகப்பெரிய  காரணம் இன்றைய   கல்வியாளர்களும், அரசாங்கமுமே! 1970 மற்றும் 80 களில் இந்தியா  சந்தித்த வேலையில்லா பிரச்சனைக்கும் இன்றைய பிரச்சனைக்கும் மிகப்பெரிய வேற்றுமை     உண்டு. அன்று வேலையில்லை ஆனால் படித்தவர்கள் இருந்தனர் ஆனால் இன்று தகுதியான வேலைகள் பல உண்டு ஆனால் படித்தவர்களில் தகுதியானவர்கள் இல்லை.தெளிவாக சொன்னால் இன்றைய இந்தியாவின் சவால் வேலையின்மை அல்ல வேலையை பெற தகுதியின்மையே!  India's   problem  is  not  unemployment , its  is unemployability ! 

இதைப்பற்றி சொன்னவுடன் வேலை பெற தகுதியின்மைக்கு எப்படி கல்வியாளர்களும், அரசாங்கமும் காரணமாக முடியும். இதல்லாம் சுத்த பிதற்றல் நல்லா படிச்சா வேலை கிடைக்க போகிறது இல்லையென்றால் இப்படி வேலையில்லாம அலைய வேண்டியதுதான்  என்ற சத்தங்கள் என் காதுகளில் விழுகிறது.ஆனால் வேலை பெற தகுதியுள்ளவர்கள் மட்டும் பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை, வேலை பெற தகுதியற்றவர்களும் பட்டங்கள் பெற்றவர்களே! அதெப்படி ஒரே பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கும் ஒருவன் வேலை பெற தகுதியுடையவன், மற்றவன் தகுதியற்றவன்   என்று என்னை போன்ற படித்த முட்டாள்கள் கேள்விகள் கேட்க கூடும்? அதற்கும் சில ஆயத்த (ரெடிமேட்) பதில்களும்   உண்டு அவை "ஒருவன் நல்லா படிச்சவன் இன்னொருத்தன் சரியாய் படிக்காதவன் ". அப்படியிருந்தாலும், சரியா படிக்காதவனுக்கு எப்படி பல்கலைகழகங்கள் பட்டதை வழங்குகின்றது? என்ற கேள்விகள் தமிழக அரசின்  இலவச திட்டங்கள் போல தொடரும்.

டைம்ஸ் ஒப் இந்திய மற்றும் NASSCOM (National Association of Software and Services Companies) போன்ற நிறுவனங்களின் புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில்  75 %  பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். அழுத்தமாக சொல்லுகிறேன் 75 % பொறியியல் பட்டதாரிகளும் முறையாக நான்கு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றவர்கள்.எனவே ஒரு செய்தி இதில் இருந்து தெளிவாகிறது இந்திய பல்கலைகழகங்கள் வேலைக்கு தகுதியான பட்டதாரிகளை உருவாக்குவதில்லை  மாறாக புத்தக எழுத்துக்களை விடைத்தாளில் மாற்றம் செய்யும் மனித அச்சகங்களை மட்டும் பெருமளவு உருவாக்குகிறது. மேலும் பாடங்களை  உருவாக்குவதற்கும்,    இணைப்பு கல்லூரிகளை     மற்றும் பல்கலைகழகங்களை  கண்காணிப்பதற்கும் , முறைபடுத்துவதற்கும் AICTE , UGC  மற்றும் NCVT போன்ற  அரசு நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றது. இது அறுவை சிகிச்சை வெற்றி!  இருந்தும் நோயாளி மரணம்!  என்ற நிலையைத்தான் சுட்டுகிறது .  

ஒவ்வொரு வருடமும் 750000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு  5 %   என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 1500000க்கும் அதிகம். இப்படியிருக்க கதைக்குதவாத இந்த கல்வி முறைகளை உடனடியாக மாற்ற வேண்டும், இல்லையென்றால் இந்த பாரத சமுதாயம்  கெட்டு சீரழியும்.இந்த பாதிப்புக்கள் இன்றைய தலைமுறையை மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறையையும்  மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும்.இந்தியாவில் 13 - 23 % சதவிதம் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர் என்ற செய்தி மேலும் ஒரு குண்டை நம் தலையில் ஏற்றுகிறது(குறிப்பாக எத்தனை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று அவர்களே ஒப்புக்கொள்வார்கள் ). தகுதியில்லா ஆசிரியர்களுக்கு காரணம் தகுதியற்ற  கல்வி முறை .  தகுதியற்ற  ஆசிரியரிடம் கல்வி கற்ற ஒருவன் தகுதியற்று  படித்து முடிப்பான்.  இதுவே இன்றைய அவலம்.   

சரி இப்படி தகுதியற்று படித்து முடிப்பவர்கள் வாழ்வு வீண் தானா என்றால் அது நிச்சியம் இல்லை. இந்திய மாணவர்கள் பிறவியிலேயே சிறந்த புத்தி கூர்மை படைத்தவர்கள் எனவே பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொண்டு   சிறந்த வேலை பெறுவதாக ஒரு அறிக்கை சொல்லுகிறது. இப்படி சுயம்புவாக படிப்பதற்கு பல்கலைகழகங்கள் எதற்கு?,இந்த கல்வி கட்டமைப்பால் என்ன பயன்?, என்ற  கேள்விகள் மனதில் கோபத்தை வளர்க்கிறது.

2007 ஆம் ஆண்டு டீம் லிஸ் (Team Lease) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் வேலையற்றவர்களில்   1  கோடி பேருக்கும் வேலையுள்ளவ்ர்களில் 7.4  கோடி பேருக்கும்   திறன் செப்பனிடல் தேவை என்று கூறுகிறது. மேலும் திறன் செப்பனிடல் பணிக்கு அரசாங்கம் 4 ,85 ,640 .00 கோடி செலவு செய்தால் அதன் மூலம் 17 ,51 ,487 .00 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்கிறது,. அரசாங்கம் சரியான கல்வி சூழலை அமைத்திருந்தால் திறன் செப்பனிடலின் தேவையும், வருவாய் இழப்பும் இருந்திருக்காது, இது செத்த பிணத்திற்கு பால்வார்க்கும் முயற்சியே!. உலகில் அணைத்து நாடுகளும் தவமிருந்தாலும் கிடைக்காத வளம் மனித வளம் அந்த வளம் இந்தியாவிடமிருந்தும் அதை சிறப்பாக பயன்படுத்தாமல் வீணாக்கி கொண்டிருக்கும் அரசாங்கம் குற்றக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியதே!  

அரசாங்கம் கல்வி திட்டத்தை    மாற்றுவது உடனடியாக நடக்காது எனவே இந்த பாதிப்பிலிருந்து நீங்க நான் சொல்லும் சில வழிமுறைகள் :   

1. பிடித்த துறையை கண்டு அதை படிப்பதால் பாடத்திட்டத்தையும்  தாண்டி நம் திறன் வளரும்
2. வேலைவாய்ப்பையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தை    நிறுத்தவேண்டும் .   
3. BE , MBBS  மட்டுமே படிப்புகள் மற்றவை வெறும் துடுப்புகள் என்ற மனநிலை மாற வேண்டும்.எனக்கு தெரிந்து பல ஓவியர்கள் , சிறந்த கலை திறமை கொண்டவர்கள் BE படித்து தங்கள் பிறவி திறமையை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். 
4. படிப்பு என்பது பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது
5.பணத்திற்கு படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் குணத்திற்கு படியுங்கள்.

 உங்கள் உள்ளம் எதை செய்ய தூண்டுகிறதோ அதை படியுங்கள் வேலை நம்மை தேடிவரும்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு,
முதலில் உங்களின் தனித்திறமையை உணருங்கள் பின்பு அதை நோக்கி உங்கள் பாதை  அமையட்டும். உங்கள் பாதை நீங்கள் படித்ததற்கு தொடர்பில்லாமல் இருந்தாலும் தவறில்லை. உங்கள் திறமை என்பது வைரம் போன்றது  படிப்பு என்பது வைரத்தை வைக்கும் பெட்டி போன்றது. வைரத்தால் தான பெட்டிக்கு மதிப்பே தவிர பெட்டியால் வைரத்திற்கு மதிப்பல்ல.   


                  வாழ்வில் சவால்களை சந்திப்பவன் மனிதனாக இருக்கிறான் ! 

     சவால்களையே வாழ்க்கையாக கொண்டவன்  சரித்திரம் படைக்கிறான்  !

Friday, 20 August 2010

உலகின் மூத்தக்குடி


 "இந்தக்கட்டுரை  மிளகையும் அரிசியையும் சேர்த்து செய்யும் பொங்கலைப்   போல  வரலாற்றையும், பூகோளத்தையும் கலந்து எழுதப்பட்டது. இதை படிக்கும் (சாப்பிடும்) போது உங்களுக்கு தூக்கம் வரலாம் அதை தவிர்த்து  கட்டுரையை   நீங்கள் படித்து முடித்தால்   உங்கள் முதுகெலும்பு உங்களை  அறியாமல் நிமிர்வதை உணரலாம்" 


Picture


இந்திய வரலாறு வெள்ளையர்களுக்கும்   மற்றும் பிற  வெளிநாட்டவர்களுக்கு  கற்பனைகளை புகுத்தும் களமாகவும் , தங்கள் ஆதிக்க எண்ணங்களை வெளிப்படுத்தும்  உறைவிடமாகவும்  இருந்துவந்தது. அவர்கள் கருத்துப்படி இந்தியர்களுக்கு எந்த தொன்மையான  வரலாறும் இல்லை, இந்திய நாகரிக வரலாறு என்பது பாரதீய புராணங்களில் வருவது போல  10000 வருட பழமையானது என்பது வெறும்  கட்டுக்கதை என்றே கருதிவந்தனர்.இந்திய புராணங்கள் அனைத்தும் கற்பனையே, வேதங்கள் அனைத்தும் சொற்ப பழமையானதே என்ற  புதிய சித்தாந்தங்களை பரப்பினர்.அந்த சமயத்தில் பல இந்தியர்கள் அதை எதிர்த்தனர் ஆனால் அவர்களும் வெள்ளையர்களின் விஞ்ஞான தத்துவப்படி நிரூபணம் செய்யமுடியாமல் தவித்தனர். பாரத வரலாறே வெள்ளையர்களின் திட்டமிட்ட அட்டவணை ஆகிவிடுமோ, நம் உண்மை வரலாறு கற்பனைகளாகவும், நம்பிக்கையாகவும் புதைந்துவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த  நேரத்தில் நம்மை காத்ததுதான் ஹரப்பா, மொஹெஞ்சதரோ போன்ற புராதான  நகரங்களின் கண்டுபிடிப்பு .கிபி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால்  மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டது , அது சிந்து நதியின் அருகாமையில்  இருந்ததால் அதற்கு அவர் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று  பெயரிட்டார். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா(Harappa) நகரம் , லோதல்(Lothal) நகரம் என்று  சிறியதும் பெரியதுமாக 2600 க்கு  மேற்பட்ட கட்டிட பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவை மேற்கே ஈரானுக்கு இடையிலும் , வடக்கே துர்க்மேனியா,பக்த்ரியா மற்றும் பமிர்ஸ் வரையும்,கிழக்கே மேற்கு உத்தர பிரதேஷ் வரையும் , தெற்கே மகாராஷ்டிராவில்  உள்ள  கோதாவரி வரை நீண்டு , வடிவேலு சொல்வது போல் "அம்மாடி எத்த தண்டி " என்று சார்.ஜான் மர்ஷலே சொல்லும் அளவுக்கு நீண்டதொரு நெடும் கலாச்சார அமைப்பாக திகழந்தது.      இந்த மாபெரும் கண்டுபிடிப்பு பாராட்டுக்களுடன்  பல சந்தேகங்களையும் கிளப்பியது.இந்த நகரங்கள் எப்படி அழிந்தது அவை ஆர்ய படையெடுப்பில் அழிந்ததா அல்லது இயற்கை சீற்றங்களால் அழிந்ததா என்று அனைவரையும் மண்டையை பிக்க வைத்தது.இந்த கண்டுபிடிப்புகளுக்கு பின் வேத பாடல்களின் மேற்கோள்களும் , கண்டுபிடிக்கப்பட்ட இடங்களும்  ஓரளவு ஒத்துவந்ததால்   இந்த ஆதாரங்கள்  அனைத்தும் சிந்து சம வெளி நாகரிகம் மிக மிக தொன்மையான நாகரிகம் என்றும் , அதன் கட்டிடக்கலை     இன்றளவும் வியக்கத்தக்கது  என்றும் உலக அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது   . சும்மா சொல்லக்கூடாது, நம்மவர்கள் 5000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பு குளங்கள் ,கிணறுகள்,குளியல் அறைகள்,திட்ட மிட்ட சாலைகள், மிக உயர்ந்த வியசாய முறை , நிர்வாகம்,கலை , எழுத்து வடிவம் ,ஒழுங்கான சாக்கடை வசதி என்று அநியாயத்துக்கு அசத்தியிருந்தனர். இதை பார்த்த வெள்ளையர்களுக்கு தங்கள் டங்குவார் அறுந்து விட்டது போல் இருந்தது, இருக்காதா பின்னே! இந்தியர்கள் இந்த சாதனைகளை செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளையர்கள் அம்மணமாக காட்டில் அல்லவா அலைந்து கொண்டிருந்தனர்.    இதற்கு பின்பும் ஏதோ குறைவது போல் தெரிந்தது, இந்திய நாகரிகம் பழமையானது என்று நிரூபணம் ஆகிவிட்டது இருந்தும் வேதங்களில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதி எங்கே!. அப்படி ஒரு நதி உண்மையிலே இருந்ததா?, அல்லது வெறும் கற்பனையா!, என்றல்லாம்  பலர் மண்டையை உடைத்து கொண்டிருந்தனர். வேதங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் தற்போது இருந்தாலும் இந்த சரஸ்வதி நதி எங்கே போனது?ஏன் அனைவரும் சரஸ்வதி நதியை இவ்வளவு முக்கியத்துவம்   கொடுத்து தேடினர்?, போன்ற ஐயங்கள்  நம் மனதில் எழலாம், ஏனெனில்  இந்திய புராணங்களில் சரஸ்வதி நதிக்கரை மிக பிரசித்தம். அவ்வளவு ஏன் மகாபாரத யுத்தம் கூட சரஸ்வதி நதிக்கரையிலே நடந்ததாக மகாபாரதத்தின் ஆசிரியர் வியாசர் குறிப்பிடுகிறார்.  வேதங்களும் சரஸ்வதியை   நதிகளின் தாய் என்று வர்ணிக்கிறது.  எப்படியோ சரஸ்வதி நதி மட்டும் கண்டுப்பிடிக்கப்பட்டால் நம் இதிகாசங்களும் , புராணங்களும் உண்மையே! என்று மெய்பிக்க முடியும், அதற்கு மேலாக ஆரிய படையெடுப்புக்களின் உண்மை தன்மையை  உலகுக்கு உணர்த்த முடியும் என்ற எண்ணம் இந்திய வரலாற்று ஆர்வலர்களிடம் இருந்தது.   இதற்கெல்லாம்  தீர்வாக அமைந்தது 1970 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு செயற்கைக்கோள்   எடுத்த  படம். அந்த படத்தை பார்த்த நம் நிலவியலாளர்களுக்கு  புதிய சரித்திரம் பிறக்க போகிறது என்ற நம்மிக்கை பிறந்தது. அந்த படம் மேற்கு மற்றும் வடக்கு இந்தியாவில்  பல நூற்றாண்டுகளுக்கு    முன்பு மறைந்த நீர் தொடர்களை பற்றி தெளிவாக விளக்கியது. இது மறைந்த சரஸ்வதி நதியின் நீர் படலங்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டது .    பின்பு சரஸ்வதி நதியின் முழு  வரைபடமும் தயாரிக்க பட்டு சரஸ்வதி நதியை தேடும் படலம் 1982  ஆம் ஆண்டு தொடங்கியது . இதற்கிடையில் பாபா அணு ஆராய்ச்சி மையம் 1995  ஆம் ஆண்டு வெளியிட்ட   அறிக்கையில் ராஜஸ்தான் பாலைவனத்தில்  50  - 60 மீட்டருக்கு அடியில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .  கண்டுபிடிக்கப்பட்ட  நீர் வளம் பாலைவனத்தில் கோடை காலங்களில் கூட விவசாயம் செய்ய போதுமானது என்று அந்த அறிக்கை மேலும் ஆச்சிரியத்தை கூட்டியது.(ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வளம் சரஸ்வதி நதியின் நீரோட்டம் என்றும், சரஸ்வதி நதி தற்போது உள்ள தார் பாலைவனத்தின் வழியாக ஓடியது என்றும் அப்போது அது பாலைவனமாக  இல்லை என்றும் பின்பு அறிஞர்கள் விளக்கியது குறிப்பிடத்தக்கது)   சரஸ்வதி நதியின் வழித்தடம் மிகவும் சுவாரசியமானது அது கைலாஷ் மானசரோவர் மலை பகுதியில் தொடங்கி சிவாலிக் கால் தடங்களில் ஓடி பின்பு ஹிமாலயத்தை அடைந்தது ஹர்யான மாநிலத்திலுள்ள க்ஹ்கர்  பள்ள தாக்கு வழியாக ராஜஸ்தான் பாலைவனம்    மற்றும்  பாகிஸ்தானில் உள்ள சோலிஸ்தான் பாலைவனம் வரை நீண்டு  பின்பு நாரா பள்ள தாக்கு வழியாக அரபிக்கடலை  அடைகிறது. இந்த நதியின் வழி தடத்தை  ஆராய்வதன் மூலம் சரஸ்வதி நதி சிந்து நதியின் இணை கோடாக ஓடியது புலப்படுகிறது.சரஸ்வதி நதிக்கும் சிந்து நதிக்கும் இடைப்பட்ட இடத்தில் தான் ஹரப்பா, மொஹெஞ்சடரோ போன்ற கலாச்சார அமைப்புகளும் இருந்தது. நாம் முன்பு கண்டது போல சிந்து சம வெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட   2600 பகுதிகளில் 2000க்கு  மேற்பட்ட பகுதிகள் சரஸ்வதி நதிக்கரைகளில்    இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . இதன் மூலம் 1920 ல் சார்.ஜான் மார்ஷல்  கண்டுபிடித்தது சிந்து சம வெளி நாகரிகம் இல்லை அது சரஸ்வதி சிந்து நாகரிகம்  என்றே  அழைக்கப்பட வேண்டும்  என்று  எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது மறைந்த சரஸ்வதி நதியை மிண்டும் ஓட வைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.        சரஸ்வதி நதியின் கண்டுபிடிப்பு பல கேள்விகளுக்கு விடை தரும் வண்ணம் உள்ளது.ஆரிய படையெடுப்பு   என்ற  ஒன்று இந்தியாவில்   நடைபெறவில்லை மாறாக  சரஸ்வதி நதி வறண்டதால் சரஸ்வதி-சிந்து சமவெளி மக்கள்   கங்கை மற்றும் யமுனை    நீர் கரைகளுக்கு புலம் பியர்ந்தனர் என்று நம்மால் எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது.அதுமட்டும் இன்றி பாரத நாட்டவர்  வேதங்களில் தங்களை தாங்களே ஆரியர் என்று அழைத்ததும்  புலனாகிறது மேலும் இதன்  மூலம் ஆர்யா-திராவிட மோதல் கட்டு கதைகள்  பிசுபிசுத்து போகும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.இந்த சூழ்நிலையில் கடல் ஆய்வாளர்  Dr.ராவ், கிருஷ்ண புராணத்தில் கூறியுள்ள துவாரகா   என்ற கடற்கரை நகரம் கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் இந்திய  இதிகாச புராணங்கள் வெறும் கட்டுக்கதையே  என்ற வாதம்  முற்றுப்பெரும். மெசொபோடோமிய(Mesopotamia) நாகரிகம் தான் உலகின் பழமையான வளர்ந்த  நாகரிகம் என்ற கூறப்பட்டாலும் அதற்கு   இணையான அணைத்து அம்சங்களும் மொழி , கலை மற்றும்   ஆயுதங்களில் அதைவிட   சிறந்த தன்மையும்  கொண்டதுதான் சரஸ்வதி சிந்து நாகரிகம். சரஸ்வதி சிந்து நாகரிக ஆராய்ச்சிகள்  தொடர்ந்து வருவதால் மேலும்  பல ஆதாரங்கள்  கிடைக்க கூடும்.எனவே உலக முன்னோடி கலாச்சார அமைப்புகளில்  சரஸ்வதி சிந்து நாகரிகம் முதன்மையானது என்பதில் இனி நமக்கு எந்த சந்தேகங்களும் வேண்டாம்        இனி நீங்களும் உங்கள்   கைகளை உயர்த்தி புஜங்களை மடித்து சொல்லுங்கள் நாம் தான் இந்த உலகின் சிறந்த  கலாச்சார மூத்தக்குடி  என்று !!!