அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Sunday 22 August 2010

வேலை இருக்கு ஆனா இல்ல


  

Picture

  சுரண்டிப்பிளைப்பவன்  ஏழ்மை பற்றி பேசுவதும் , இன்றைய  அரசியல்வாதி நேர்மைபற்றி உரைப்பதும் , வெயிலில் கருப்புசட்டை அணிந்து  பகுத்தறிவு பறைசாற்றுவதும் , தமிழ் வாழ்க என்று ஆங்கிலத்தில் முழங்குவதும் எவ்வளவு  கேளிக்குரியதோ அவ்வளவு நகைப்பிற்குரியது இன்றைய கல்வியாளர்கள் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசுவதும். தற்பொழுது  உள்ள வேலையில்லா திண்டாட்டத்திற்கு   மிகப்பெரிய  காரணம் இன்றைய   கல்வியாளர்களும், அரசாங்கமுமே! 1970 மற்றும் 80 களில் இந்தியா  சந்தித்த வேலையில்லா பிரச்சனைக்கும் இன்றைய பிரச்சனைக்கும் மிகப்பெரிய வேற்றுமை     உண்டு. அன்று வேலையில்லை ஆனால் படித்தவர்கள் இருந்தனர் ஆனால் இன்று தகுதியான வேலைகள் பல உண்டு ஆனால் படித்தவர்களில் தகுதியானவர்கள் இல்லை.தெளிவாக சொன்னால் இன்றைய இந்தியாவின் சவால் வேலையின்மை அல்ல வேலையை பெற தகுதியின்மையே!  India's   problem  is  not  unemployment , its  is unemployability ! 

இதைப்பற்றி சொன்னவுடன் வேலை பெற தகுதியின்மைக்கு எப்படி கல்வியாளர்களும், அரசாங்கமும் காரணமாக முடியும். இதல்லாம் சுத்த பிதற்றல் நல்லா படிச்சா வேலை கிடைக்க போகிறது இல்லையென்றால் இப்படி வேலையில்லாம அலைய வேண்டியதுதான்  என்ற சத்தங்கள் என் காதுகளில் விழுகிறது.ஆனால் வேலை பெற தகுதியுள்ளவர்கள் மட்டும் பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை, வேலை பெற தகுதியற்றவர்களும் பட்டங்கள் பெற்றவர்களே! அதெப்படி ஒரே பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கும் ஒருவன் வேலை பெற தகுதியுடையவன், மற்றவன் தகுதியற்றவன்   என்று என்னை போன்ற படித்த முட்டாள்கள் கேள்விகள் கேட்க கூடும்? அதற்கும் சில ஆயத்த (ரெடிமேட்) பதில்களும்   உண்டு அவை "ஒருவன் நல்லா படிச்சவன் இன்னொருத்தன் சரியாய் படிக்காதவன் ". அப்படியிருந்தாலும், சரியா படிக்காதவனுக்கு எப்படி பல்கலைகழகங்கள் பட்டதை வழங்குகின்றது? என்ற கேள்விகள் தமிழக அரசின்  இலவச திட்டங்கள் போல தொடரும்.

டைம்ஸ் ஒப் இந்திய மற்றும் NASSCOM (National Association of Software and Services Companies) போன்ற நிறுவனங்களின் புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில்  75 %  பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். அழுத்தமாக சொல்லுகிறேன் 75 % பொறியியல் பட்டதாரிகளும் முறையாக நான்கு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றவர்கள்.எனவே ஒரு செய்தி இதில் இருந்து தெளிவாகிறது இந்திய பல்கலைகழகங்கள் வேலைக்கு தகுதியான பட்டதாரிகளை உருவாக்குவதில்லை  மாறாக புத்தக எழுத்துக்களை விடைத்தாளில் மாற்றம் செய்யும் மனித அச்சகங்களை மட்டும் பெருமளவு உருவாக்குகிறது. மேலும் பாடங்களை  உருவாக்குவதற்கும்,    இணைப்பு கல்லூரிகளை     மற்றும் பல்கலைகழகங்களை  கண்காணிப்பதற்கும் , முறைபடுத்துவதற்கும் AICTE , UGC  மற்றும் NCVT போன்ற  அரசு நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றது. இது அறுவை சிகிச்சை வெற்றி!  இருந்தும் நோயாளி மரணம்!  என்ற நிலையைத்தான் சுட்டுகிறது .  

ஒவ்வொரு வருடமும் 750000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு  5 %   என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 1500000க்கும் அதிகம். இப்படியிருக்க கதைக்குதவாத இந்த கல்வி முறைகளை உடனடியாக மாற்ற வேண்டும், இல்லையென்றால் இந்த பாரத சமுதாயம்  கெட்டு சீரழியும்.இந்த பாதிப்புக்கள் இன்றைய தலைமுறையை மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறையையும்  மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும்.இந்தியாவில் 13 - 23 % சதவிதம் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர் என்ற செய்தி மேலும் ஒரு குண்டை நம் தலையில் ஏற்றுகிறது(குறிப்பாக எத்தனை பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று அவர்களே ஒப்புக்கொள்வார்கள் ). தகுதியில்லா ஆசிரியர்களுக்கு காரணம் தகுதியற்ற  கல்வி முறை .  தகுதியற்ற  ஆசிரியரிடம் கல்வி கற்ற ஒருவன் தகுதியற்று  படித்து முடிப்பான்.  இதுவே இன்றைய அவலம்.   

சரி இப்படி தகுதியற்று படித்து முடிப்பவர்கள் வாழ்வு வீண் தானா என்றால் அது நிச்சியம் இல்லை. இந்திய மாணவர்கள் பிறவியிலேயே சிறந்த புத்தி கூர்மை படைத்தவர்கள் எனவே பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொண்டு   சிறந்த வேலை பெறுவதாக ஒரு அறிக்கை சொல்லுகிறது. இப்படி சுயம்புவாக படிப்பதற்கு பல்கலைகழகங்கள் எதற்கு?,இந்த கல்வி கட்டமைப்பால் என்ன பயன்?, என்ற  கேள்விகள் மனதில் கோபத்தை வளர்க்கிறது.

2007 ஆம் ஆண்டு டீம் லிஸ் (Team Lease) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் வேலையற்றவர்களில்   1  கோடி பேருக்கும் வேலையுள்ளவ்ர்களில் 7.4  கோடி பேருக்கும்   திறன் செப்பனிடல் தேவை என்று கூறுகிறது. மேலும் திறன் செப்பனிடல் பணிக்கு அரசாங்கம் 4 ,85 ,640 .00 கோடி செலவு செய்தால் அதன் மூலம் 17 ,51 ,487 .00 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் பரிந்துரை செய்கிறது,. அரசாங்கம் சரியான கல்வி சூழலை அமைத்திருந்தால் திறன் செப்பனிடலின் தேவையும், வருவாய் இழப்பும் இருந்திருக்காது, இது செத்த பிணத்திற்கு பால்வார்க்கும் முயற்சியே!. உலகில் அணைத்து நாடுகளும் தவமிருந்தாலும் கிடைக்காத வளம் மனித வளம் அந்த வளம் இந்தியாவிடமிருந்தும் அதை சிறப்பாக பயன்படுத்தாமல் வீணாக்கி கொண்டிருக்கும் அரசாங்கம் குற்றக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியதே!  

அரசாங்கம் கல்வி திட்டத்தை    மாற்றுவது உடனடியாக நடக்காது எனவே இந்த பாதிப்பிலிருந்து நீங்க நான் சொல்லும் சில வழிமுறைகள் :   

1. பிடித்த துறையை கண்டு அதை படிப்பதால் பாடத்திட்டத்தையும்  தாண்டி நம் திறன் வளரும்
2. வேலைவாய்ப்பையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தை    நிறுத்தவேண்டும் .   
3. BE , MBBS  மட்டுமே படிப்புகள் மற்றவை வெறும் துடுப்புகள் என்ற மனநிலை மாற வேண்டும்.எனக்கு தெரிந்து பல ஓவியர்கள் , சிறந்த கலை திறமை கொண்டவர்கள் BE படித்து தங்கள் பிறவி திறமையை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். 
4. படிப்பு என்பது பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது
5.பணத்திற்கு படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் குணத்திற்கு படியுங்கள்.

 உங்கள் உள்ளம் எதை செய்ய தூண்டுகிறதோ அதை படியுங்கள் வேலை நம்மை தேடிவரும்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு,
முதலில் உங்களின் தனித்திறமையை உணருங்கள் பின்பு அதை நோக்கி உங்கள் பாதை  அமையட்டும். உங்கள் பாதை நீங்கள் படித்ததற்கு தொடர்பில்லாமல் இருந்தாலும் தவறில்லை. உங்கள் திறமை என்பது வைரம் போன்றது  படிப்பு என்பது வைரத்தை வைக்கும் பெட்டி போன்றது. வைரத்தால் தான பெட்டிக்கு மதிப்பே தவிர பெட்டியால் வைரத்திற்கு மதிப்பல்ல.   


                  வாழ்வில் சவால்களை சந்திப்பவன் மனிதனாக இருக்கிறான் ! 

     சவால்களையே வாழ்க்கையாக கொண்டவன்  சரித்திரம் படைக்கிறான்  !

No comments:

Post a Comment