அன்பு நண்பர்களே !!

"ஆயுதம்" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல ! அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல! உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .

என்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் ?இது தேவை தானா ? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு !

இதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்

Sunday 10 October 2010

திரு.கடவுள்


இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன், பல சந்தேகங்கள், குழப்பங்கள் உங்களை  சூழ்ந்து கொண்டு "என்ன சொல்ல வர  " என்று என்னை திட்டினால், இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சரியாக உங்களை சென்றடைந்தது என்று அர்த்தம். சில தலைப்புக்கள் மகிழ்ச்சியடைய செய்யும் , பல தலைப்புக்கள் நமக்கு அறிவளிக்கும் இன்னும் சில லைப்புக்கள் சலிப்படைய செய்யும் ஆனால் இந்த தலைப்பு நிச்சியம் குழப்பும். அப்படி இது உங்களை பல வகைகளில் குழப்பினால் அதுவே இந்த தலைப்பின் வெற்றி .  என்ன குழம்ப தயாரா !!!


நீங்கள் உலகின் ஒப்பற்ற, அனைவரும் போற்றும் நபராக வேண்டுமா ? இந்த  கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். ! 



பிரபஞ்சம் எப்படி தோன்றியது அதை யார் தோற்றுவித்தார்கள், அந்த பிரபஞ்சம் எப்படி தானியக்க(Automatic) முறையில் இயங்குகிறது , நாம் வாழும் உலகம் எப்படி உருவானது  , அதில் உயிர் எப்படி உருவானது , அந்த உயிர் எப்படி இனங்களாக உருப்பெற்றது. இதற்கு நீங்கள் மிக சிறந்த விளக்கங்களை அனைவரும் ஏற்கும்வன்னம் கொடுத்தால் நீங்கள் தான் உலகின் ஒப்பற்ற சிந்தனையாளர் !  இந்த கேள்விகளுக்கு நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கமளித்தால் மத கொள்கையாளர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள், ஆன்மிக ரீதியாக  விளக்கமளித்தால் பகுத்தறிவாளிகள் உங்கள் பற்களை தட்டிவிடுவார்கள், ஆளவிடுங்கடா சாமி என்று ஒதுங்கி கொண்டால் கொள்கைகள் அற்ற கோமாளிகளாகி விடுவீர்கள். "என்னடா லூசு தனமா பேசுற நீ என்ன தான் சொல்ல வர " என்று திட்டினால் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த கட்டுரையில் உள்ளது  மேலே தொடருங்கள்.   



இன்று அனைத்தையும் அறிவியல் ரீதியாக பார்ப்பது என்ற சிந்தனை பரவலாக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் ரீதியான பார்வை சிறந்தது என்றாலும் அதுமட்டும் முடிவாகாது. ஏனென்றால் அறிவியலில்  பல மூட  நம்பிக்கைகள் உள்ளது.என்ன அறிவியலில் மூடநம்பிக்கைகளா !என்று உங்கள் புருவம் உயர்ந்தால் அதற்கு விளக்கங்கள் பல உண்டு . ஆன்மிகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் அப்பட்டமானவை அனைவரும் அறிந்து கொள்ள கூடியவை. ஆனால் அறிவியல் மூட நம்பிக்கைகள் மூடி மறைக்கப்பட்டவை அதன் முரண்பாடுகள் அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுபவை. ஏன் அறிவியல் மூடநம்பிக்கைகளை அனைவரும் அப்படியே ஏற்று கொள்கிறார்கள் என்றால்  நாம் அப்படியே பழக்கப்பட்டோம். ஒரு செயலை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது என்று சொன்னால் அதை மறு மொழியின்றி அப்படியே ஏற்றுக்கொள்வது நமது வாடிக்கையாகிவிட்டது.        



இன்னொரு மூடநம்பிக்கை என்னவென்றால் அறிவியலால் நிருபனம் செய்ய  முடியாதவற்றை அப்படியே மறுப்பது . உலகில் உள்ளவற்றுள் 99 சதவீதம்  அறிவியல் நிருபனம் இல்லாததுதான் அதற்காக அனைத்தும் பொய்யா ! அல்லது கற்பனையா! ஏனென்றால் இந்த உலகில் உள்ள ,உயிர் உள்ள, உயிர் அற்ற பொருட்களில் வெறும் 0.00000000000035 % (3 . 5 X 10 ^ -13 )  மட்டுமே நம்மால் காண முடியும் .இந்த மாதிரி ஒரு டொங்கு கண்ணை வைத்துகொண்டு அனைத்தையும் கண்ணால் பார்த்தால் தான் ஒப்புக்கொள்வேன், அனைத்தையும் பகுத்தறிவோடுதான் எடைபோடுவேன் என்றால் நம்மை போல முட்டாள்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது. 



அறிவியலால் நிரூபிக்கப்பட்ட அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்றால் அந்த நிருபனங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அறிவியலும் அறிவியல் அறிஞர்களும் அப்படி கூற மாட்டர்கள் அவர்களால் கூறவும் முடியாது.ஏனென்றால் அறிவியல் தன்னால் கண்டுபிடிக்க முடியாததை   அப்படியே ஏற்றுகொள்கிறது. ஏன் டார்வின் கொள்கைஅப்படியே ஏற்று கொள்ளப்பட்டது? , மற்ற எந்த கோட்பாடும் அறிவியலை மட்டும் முன்னிறுத்தவில்லை மாறாக கடவுளையும் சேர்த்து  முன்னிறுத்தியது. டார்வின் ஒருவரே பரிணாம கொள்கையை அறிவியலின் அளவுகோல் கொண்டு  பார்த்தார், அதனால் அது அப்படியே ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னாளில் டார்வின் கொள்கைகள் பல இடங்களில்  மண்ணை கவ்வியது  என்றாலும் பரினாமத்தை விளக்க வேறெந்த கொள்கைகளும் அறிவியல் ரீதியாக இல்லாததால் அது அப்படியே  ஏற்றுக்கொள்ளப்பட்டது. டார்வின் சொன்னார் தண்ணிரில் இருந்து உயிர்கள் தோன்றியது, அவை அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியது என்று. அவரின் " The Origin of Species " என்ற புத்தகத்தில் சொல்லியுள்ள இந்த விளக்கங்களுக்கு எந்த வித  முழுமையான சான்றுகளும் இல்லை. அவர் சொன்ன பல கருத்துக்கள் வெறும் அனுமானமே! அதற்கு ஒரு உதாரணம்: பல  வருடங்களாக  உயிர் இனங்களை செயற்கை இனப்பெருக்கம் மூலம் ஆராய்ந்து  வருகின்றனர் ஆனால்  அவைகளில் இருந்து மற்றொரு உயிரினம் தோன்றவேயில்லை(Evolution Mismatch), அவர் கொள்கைப்படி ஏதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், ஆனால் முடிவு பூஜியம் தான். 



முடிவிலி (இன்பினிட்டி) என்ற  குறியீட்டை கொண்டுதான் இயற்பியலில் பல சூத்திரங்கள் (Formula)  செயல்படுகிறது. ஆனால் அந்த இன்பினிடியை சரியாக விளக்க யாராலும் முடியவில்லை, இன்பினிடியை ஒரு கணித கோட்பாடாக விளக்க முடிந்ததே தவிர அதன் முழு வீ ரியத்தை யாராலும்   விளக்க முடியவில்லை. இன்று நாம் காணும் பல சூத்திரங்களுக்கு பின் இந்த இன்பினிட்டி ஒளிந்து உள்ளது , அந்த சூத்திரங்களை நாம் நடைமுறையில் பயன் படுத்தினால் முடிவுகள் துல்லியமாக உள்ளது என்பது விந்தை. மின் ஆற்றல்  எதை பொறுத்து  அமைகிறது என்று கண்டு பிடிக்க அறிவியலாளர்கள் இன்பினிட்டியை உபயோகபடுதுகின்றனர். இன்பினிட்டி என்றால் எல்லையற்ற என்று பொருள்; நாம் உருவாக்கும் மின்சாரம் ஒரு எல்லையுள்ள தன்மை கொண்டது; எப்படி எல்லையற்றதை கொண்டு ஒரு எல்லைக்குட்பட்டதை அளக்க முடியும் ? எளிமையாக சொன்னால் ஒரு வண்டியின் இயக்கத்தை மதிப்பிட அந்த வண்டியின் என்ஜின்னின்  சக்தி பற்றிய அறிவு தேவை . அதேபோல் இந்த உலகில் உள்ள  எந்த சக்தியை அளவிடவும் இந்த உலகத்தின் இயக்க சக்தி பற்றிய அறிவு தேவை; ஆனால் இந்த உலத்தின் இயக்க சக்தியை யார் அறிவார்கள் ? எனவே அதை இன்பினிட்டி அல்லது அளவிடமுடியாதது   என்று கூறலாம் . எனவே தான் அணு ஆற்றல் தொடங்கி பல இயற்பியல் தத்துவங்களின் அளவீடுகளில் இந்த இன்பினிட்டி பயன் படுத்தப்படுகிறது.   இன்பினிட்டியை  முழுமையாக அறிய அறிவியல் தவறிவிட்டது ஆனால் அதை அப்படியே உபயோக படுத்துகிறது, எனவே அறிவியல் அனைத்தையும் நிருபித்து பின்பு ஏற்றுக்கொள்ளும் என்ற வாதம் அர்த்தமற்றது.  



பிறந்த பசுக்கன்று எப்படி தன் தாய் மடியை தேடி ஓடுகிறது, எத்தனை தலைமுறையாக பறவையினம் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்டாலும் கூண்டில் இருந்து வெளிவந்தால் அது பறக்க தானாகவே கற்றுக்கொள்ளும் அது எப்படி, உலகின் எடை எப்படி மிக சமமாக நிருவகிக்கப்படுகிறது, எப்படி இந்த பிரபஞ்சம்  தானியங்கியாக இயங்குகிறது  போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அனைவராலும் ஒப்புக்கொள்ளும் விளக்கங்களை அறிவியலால் தர முடியாது.அறிவியலை மட்டும் அளவுகோலாக கொண்டு அனைத்தையும் பார்ப்பது மெத்த  மூடதனமே !  



சரி நான் கட்டுரையின்  தொடக்கத்தில்   கேட்ட கேள்விகளுக்கு பல பதில்களை பல முறைகளில் தேடினேன் ஆனால் அந்த பதிலை தந்தது கபிலர் என்ற ஞானி . அவர் அருளியதுதான் சாங்கியம் , இந்த பிரபஞ்சத்தை பற்றிய பல கேள்விகளுக்கு அனாயசமாக பதிலளிக்கிறார்   கபிலர் . இதோ அவரின் உதவியுடன் எனது சில விளக்கங்கள் .



            1 . நாம் இந்த உலகத்தை நம் கண்களால் காண்கிறோம்   அதாவது மனிதன் என்ற உயிரினம் இந்த உலகத்தை தன் அறிவால் காண்கிறது. நம்  மூலையின் இயக்க திறன் ஒரு எல்லைக்குட்பட்டது ஆனால் நாம் விளக்க துடிக்கும் இந்த பிரபஞ்சம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. எலி ஒரு கல்லை தூக்க எண்ணி   அது முடியாமல் போனால் அந்த கல் தூக்கமுடியதது என்று சொல்லுவது எவ்வளவு நகைப்புக்குரியது . அது போல் தான் நம் எல்லைக்குட்பட்ட அறிவை வைத்து எல்லையில்லா பிரபஞ்சத்தை அளப்பதும்.



            2. மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் ஒரு பொருள், மிருகங்களுக்கு வேறு மாதிரியாக தெரியலாம். நாம் இன்று காணும் இந்த பிரபஞ்சம் மனிதனின் பார்வை, அது மற்ற உயிரினங்களின்   பார்வையில்   இருந்து நிச்சியம் மாறுபடும். அளக்க முடியாத உயிரினங்கள் கொண்ட இந்த பிரபஞ்சத்தை மனிதர்கள் பார்வையில்  மட்டும்  புரிந்து கொள்ள நினைப்பது மூடத்தனமானது.   



             3 .நம் கண்களை பறித்தால் நம்மால் பார்க்க முடியாது , நம் செவிகளை பறித்தால் நம்மால் கேட்க முடியாது , நம் உணர்ச்சி  நரம்புகளை  பறித்தால் நம்மால் உணர முடியாது, நம் நாக்கை பறித்தால் நம்மால் சுவைக்க முடியாது, நம் மூக்கை பறித்தால் நம்மால் வாசனைகளை பகுக்க முடியாது. இப்படி புலன்களை நம் உடம்பில் இருந்து எடுத்துவிட்டால் நாம் இந்த பிரபஞ்சத்தை வேறு மாதிரியாக  உணரலாம் . நாம் ஒரு பொருளை பற்றி நினைப்பது அனைத்தும் இந்த புலன்களின் உதவியால் தான். இந்த புலன்களின் செயல்பாடுகள் உயிரினத்திற்கு உயிரினம்  நிச்சியம் மாறுபடும். எனவே அணைத்து உயிரினங்களுக்கு  பொதுவான இந்த பிரபஞ்சத்தை நம் புலன்களை கொண்டு மட்டும் அளக்க முடியாது.    



            4 .எனவே இந்த பிரபஞ்சத்தை பற்றிய சரியான செயல் வடிவத்தை பெற நாம் புலன்களை கடந்து செல்ல வேண்டும். அது அறிவியலில் நிச்சியம் முடியாது. ஏனென்றால், அறிவியல் என்பது நம்முடைய அறிவின் வெளிப்பாடு மட்டுமே ! புலன்களை கடந்த செயல் வடிவம் பெற இந்த பிரபஞ்சத்தின் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கபிலர் .  



            5. ஆதியில் இருப்பது இரண்டே இரண்டு தான் அவை உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material ) இதன் வித விதமான கலப்பு தான் இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கிறது என்று வாதிடுகிறார் கபிலர். உலகில் உள்ள அனைத்து உயிரினமும்   தோன்றியது    இந்த ஆதி பொருட்களின் வித விதமான கலப்பில்தான் என்கிறது கபிலரின் மொழிகள் . இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடு என்று நாம் நினைப்பது , உணர்வது பலதும் அடிப்படையில் வேறொன்றாக இருக்கலாம் அல்லது வெறும் மாயையாக (Illusion )  கூட இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தை முழுமையாக அறிய இந்த புலன்களின் அமைப்பை விட்டு விட்டு மீண்டும் உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material  ) என்ற ஆதி நிலையை அடைய வேண்டும் என்று கூறுகிறார்.எனவே இந்த பிரபஞ்சம் உருவாக்க பட்டது அல்ல உருவானது என்று கர்ஜிக்கிறார் கபிலர்.  



       கபிலர் சொல்லும் வரைமுறை ,அவரின் பார்வை, அனைத்தும் கடவுள்   என்ற ஒருவர் இந்த உலகத்தை உருவாக்கவில்லை  என்று வாதிடுவது. ஆனால் இந்த பிரபஞ்சத்தை எவன் ஒருவன் முழுமையாக உணர்கிறானோ அவனே கடவுள் என்பதும் வேறு பிற ஞானிகளின் கருத்து.  கபிலர்  குறிப்பிடும் ஆதி  தத்துவங்களான  உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material ) எப்படி தோன்றியது என்று கேட்டால்    அதற்கு பலரும் கடவுள் என்றே  பதில் உரைக்கிறார்கள் . 



எனவே இந்த பிரபஞ்ச ஆராய்ச்சி என்பது சோதனை கூடங்களில் செய்யவேண்டியது இல்லை மாறாக  நம்மை நாமே உணர்வது . ஏனென்றால்  இந்த பிரபஞ்சத்தின் மூல கூறுகள் ( உயிராற்றல் (energy of living) மற்றும் ஜடப்பொருள் (physical material )  ) நம்மிடமே உள்ளது . அந்த ஆதி   கூறுகள் உயிர் உள்ள, உயிரற்ற அணைத்து பொருட்களிலும் வியாபித்திருக்கிறது என்பதே அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அந்த ஆதி கூறுகளை கடவுள் என்றால்  இந்த உலகில் உள்ள அணைத்து பொருட்களிலும் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். 



நம்மை நாமே உணர்வதற்கும் , மனிதனின் அடிப்படை உணர்வுகளை நெறிப்படுத்தி  அதை வகைப்படுத்த ஏற்பட்டதே மதங்கள். அந்த மதங்களை சரியாக பாதுகாக்க , புரிந்து கொள்ள , அவற்றின் அடிப்படையை  காக்க நம் முன்னோர்கள் ஒருவரை உபயோக படுத்தி கொண்டார்கள்  அவர் தான் திரு .கடவுள் .

   
பிரபஞ்சம் பற்றி சந்தேகங்கள் , கேள்விகள் இந்த உலகில் இருக்கும் வரை திரு. கடவுள் இருந்து கொண்ட இருப்பார். நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் அவர் நம்மில் இருப்பார். கடவுளை மறுக்க வேண்டும் என்றால், முதலில் இந்த பிரபஞ்ச சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும். அப்படி பதிலளித்து இந்த பிரபஞ்சத்தை நீங்கள் உண்மையாக கபிலர் சொன்னபடி உணர்ந்து கொண்டால், நீங்கள்  கடவுள் என்று ஒருவர் இல்லை என்று நிருபிக்கலாம் .  ஆனால்  அப்படி நீங்கள் நீருபிக்கும் நிமிடம் முதல் நீங்கள் கடவுளாக மாறியிருப்பிர்கள் என்பது நிச்சியம் .   



திரு.கடவுள் இந்த உலகின் தவிர்க்க முடியாத ஒரு குறியீடு .